Saturday, October 29, 2011

என்னுரை


எல்லாவற்றிற்கும் அளவுகோல் வைத்திருக்கிறோம்.  படிக்க, உழைக்க, பயணிக்க, உண்ண, உடுத்த என எல்லாவற்றிற்கும் அளவு கோல் வைத்திருக்கும் நாம் நமது ஆசைக்கு அளவுகோல் வைத்திருக்கிறோமா?  புதுவீடு கட்டியவனைப் பார்க்கும்போது நமக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
மற்றவர்கள் காரில் போகிறார்கள். கடனை வாங்கியாவது  காரில் செல்ல வேண்டும் என்ற ஆசை உருவாகிறது.    
உயர வேண்டும் என்கிற ஆசை நல்லதுதான்.   எப்போதும் உயர்வான சிந்தனைதான் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இந்த நூலின் தலைப்பு வானமே எல்லை என்பதும் உங்களின் கட்டுப்படாத கனவுகளுக்குத் துணையாக வரக்கூடியது.
பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றைத் தவிர மற்ற நல்ல பண்புகளுக்கு கட்டுப்பாடு தேவையில்லை. அளவுகோல் தேவையில்லை!
மனித உயர்வைத் தடுக்கும் எவற்றையும் தகர்த்துவிட்டு வெளிவர நல்ல அனுபவங்கள் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் கூறுவது போல் நம் மக்களையே  மனதளவில் நாடு, மாநிலம், ஊர், மதம், சாதி, மொழி என இனம் பிரித்து அவர்களை வேற்றுமைப்படுத்தும் பார்வை தேவையில்லை.  எல்லோரும் ஒரே தாய் மக்கள் என்ற நினைப்புதான் நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லும்.
அனைவரும் சமம் என்ற நினைப்புதான் வேண்டும்.  படித்தவர், படிக்காதவர் என்ற கண்ணோட்டம் தேவையில்லை.  அப்படி ஓர் எல்லைக்குள் அகப்பட்டுவிட்டால் நாமும் சராசரி மனிதனாகவே வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
புகழ் பெற வேண்டும்;  வெற்றி பெற வேண்டும்;  உயர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உள்ளவர்களுக்குத்தான்  இந்த நூல் கரம் கொடுத்து வழி நடத்தும்.
விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியால் உலகம் சிறு விரல்களுக்கிடையே அகப்படும் அளவிற்கு சுருங்கிப் போய்விட்டது நாம் செய்த புண்ணியம்.  அதன் துணையுடன் எல்லா மொழியையும் (தமிழுடன்) கற்றுத் தேர்ந்து, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி, எந்நேரமும் உழைக்கத் தயாராகுங்கள் என்ற விருப்பத்துடன் இந்நூலின் உள்ளே செல்ல அழைக்கிறேன்.  வாருங்கள்.

0 comments: